Tuesday, July 9, 2013

மலிவு

தமிழர்கள் பண்டை காலம் கொண்டே வணிகத்தில் சிறந்து விளங்கினர். கடல் கடந்து முத்து, தங்கம், தாணிய வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்று படித்திருப்போம். தமிழர்களின் வணிக நுண்ணறிவிற்கு சிறந்த உதாரணமாக 'மலிவு' என்ற சொல் ஒன்றே போதும்.

தமிழகத்தில் இலவசம் என்ற சொல்லிற்கு அடுத்தபடி 'மலிவு'தான் mass. 'மலிவு விலை உணவகம்', 'மலிவு விலையில் காய்கனி' என்று நாள்தோறும் கேட்கிறோம், படிக்கிறோம். இங்கே மலிவு என்பதற்கு 'விலை குறைந்த' என்ற பொருள் கொண்டு படிக்கிறோம். மலிந்த என்ற வார்த்தையின் மூலத்தை (root) ஆராய்ந்தால் இங்கே ஒரு அறிவியல் கோட்பாடு மறைந்துள்ளதை உணரலாம்.

மலிவு என்ற சொல்லின் மூலம் 'மல்' ஆகும். மல்,மல்கு என்றால் பெருகு, அதிகமாக்கு என்று பொருள். 'நாட்டில் குற்றங்கள் மல்கி (அதிகரித்து) விட்டன', 'இந்தியாவில் ஊழல் மலிந்து (பெருகி) விட்டது', காவிரி மல்கி வழிகிறது போன்ற சொற்றொடர்கள் உதாரணம். 

மலிவின் பொருள் பெருகுதல் என்றிருக்க விலை சம்பந்தமான இடங்களில் மட்டும் விலை குறைந்த, cheap என்ற பொருளில் ஏன் பயன்படுத்தப்படுகிறது?


இங்கே தான் 'demand supply theory'யை தமிழர்கள் நுண்மையாக கையாண்டுள்ளார்கள். பொருளியலில் (economics) 'demand supply theory' படி ஒரு பொருளின் உற்பத்தியும் தரவும் (supply) அதிகமாக இருந்து தேவை (demand) குறைவாக இருந்தால் அதன் விலை குறைவாக இருக்கும். ஆக, மலிவாக (அதிகமாக) ஒரு பொருளின் தரவு இருந்தால் அதன் விலை குறைவாக இருக்கும். இதன் பொருட்டே வணிகம், விலை தொடர்பான சொற்றொடர்களில் 'மலிவு' என்பதன் பொருள் 'cheap' என்ற மருவிய உணர்வோடு பயன்பட்டு வருகிறது. அங்கே உள்ளார்ந்த பொருள், அந்த பொருளின் தரவு பெருகி உள்ளது என்பதே.

ஒரு சிறிய வார்த்தையில் ஒரு வணிக தத்துவமே மறைந்துள்ள நம் தமிழ் மொழி பழமை வாய்ந்தது மட்டும் அல்ல, அறிவியல் பூர்வமானதும் கூட என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவை இல்லை.

Tuesday, January 22, 2013

பிச்சைப்பாத்திரம்

ஒரு காலத்தில் பார்க்கிற பிச்சைக்காரர்களுக்கெல்லாம் எதாவது கொடுத்துட்டு இருந்தேன். பிறகு ஒரு காலத்தில் பிச்சையை ஆதரிப்பது தவறுன்னு அந்த பழக்கத்தை விட்டிருந்தேன். அதோடு இல்லாமல் பிச்சை கேட்பவர்களிடம் சில நேரங்களில் வாக்கு வாதமும் செய்திருக்கிறேன். ஒரு முறை பிச்சை எடுக்கும் ஒரு பாட்டியுடன் சண்டை போடும் அளவிற்கு போய்விட்டது. ஆனால் சமீப காலமாக திரும்பவும் பிச்சைக்காரர்களுக்கு உதவ ஆரம்பித்துள்ளேன். உந்துதல் - இரு வாரங்களுக்கு முன் சென்னை தி நகரில் நிகழ்ந்த நிகழ்வு. நல்லி சில்க்ஸ் வழியே சென்று கொண்டிருந்தேன். வெயில் மண்டையை பிளக்க அருகில் இருந்த ஆவின் கடையில் லஸ்ஸி வாங்கி குடித்துக்கொண்டிருந்தேன். குடித்து முடித்த வெற்று பாக்கெட்களை போட குப்பை தொட்டி இருந்தது. சென்னை வெயிலின் ஆசியால் குப்பை தொட்டி நிரம்பி இருக்க அங்கே வந்த ஒரு பிச்சைகாரர் - பார்க்க படு மோசமாக இருந்தார் - குப்பைத்தொட்டியில் இருந்த வெற்று பாக்கெட் ஒவ்வொன்றாக எடுத்து உரிந்து உரிந்து பாக்கெட்டில் இருந்த கடைசி துளிகளை நக்கிக்கொண்டிருந்தார். இந்தியாவில் இப்படிப்பட்ட காட்சியை பலர் கண்டிருப்போம்; இருந்தாலும் மனம் அதிர்ந்தது; உடனே ஒரு லஸ்ஸி பாக்கெட் வாங்கி அவர் கையில் கொடுத்து விட்டு கிளம்பினேன். அன்றிலிருந்து திரும்பவும் பிச்சைகாரர்களுக்கு உதவ ஆரம்பித்துள்ளேன்.

நீரில் மூழ்கிக்கொண்டிருப்பவனிடம் நீச்சல் பற்றி அறிவுரை எடுபடாது. அதே நேரத்தில் (நான் சண்டை போட்ட அந்த பாட்டி போல) நம் மனித நேயத்தை குறி வைத்து தொழில் செய்யவும் அனுமதிக்கலாகாது. பல நேரங்களில் நம்மால் நிலைமை என்ன என்று கணிக்க முடிவதில்லை; பதில் கிடைப்பதற்குள் traffic signal green ஆகிவிட வண்டியும் கிளம்பிவிடுங்கிறது; நமக்குள் குற்ற உணர்ச்சியே மிஞ்சுகிறது. 

அறிவும் மனதும் போராடும் போர்களங்களுள் இதுவும் ஒன்று; பசியும் நேயமும் இருக்கும் வரை மனமே வெல்கிறது; ஆனால் அது நன்மையா என்பது கேள்விக்குரியே!

Friday, January 11, 2013

சலூனில் சாம்பிராணி

மார்கழிக் குளிரில் விடியற்காலையில் முடி திருத்த போயிருந்தேன் சலூனுக்கு
சலூனில் சாம்பிராணி போட வந்திருந்தார் ஹுசேன் பாய்
சாம்பிராணி புகையை சலூன்காரர் முகம் நோக்கி வீசினார் குரானிலிருந்து படித்தவாறு
சலூன்காரரும் திருப்பாவை பாடியவாரே காணிக்கை கொடுத்து பாயை வழி அனுப்பிவைத்தார்

மார்கழி பனியில் சாம்பிராணி புகை இதமாக இருந்தது
இந்த புகையால் கண்களும் கசங்கவில்லை மனங்களும் நோகவில்லை
புகை கலைய பனி விலக மதம் மறைய தெய்வீக ஒளி மிளிர்ந்தது

சலூன் benchஇல் காத்திருந்தேன் என் முறை வர
தொலைக்காட்சியில் குண்டுவெடிப்பு செய்தி
குண்டு புகைகக்கு இடையே உயிர்களைத் தேடும் அவலக்குரல்கள்
இந்தப் புகையும்  மறைவது என்றோ?


- அ

Wednesday, January 2, 2013

விரக்தி

ஆசைகளும் தேவைகளும் பெருக
மனங்களும் பொறுமையும் குறுக
நாள்தோறும் நிகழ்கின்றன
மூன்றாம் உலகப்போர்கள்
சாலைகளில்!

Monday, November 26, 2012

பிறந்தநாள் வாழ்த்து

ஆண்டுக்கு ஒருமுறை அதுவாய் வந்துபோகிறது
அதற்கு ஏன் உனக்கு வாழ்த்து?
அயராது உன்னை பெற்றெடுத்து வளர்த்த
பெற்றோருக்கு சொல்வேன்
உன் பிறந்தநாள் வாழ்த்து!

Tuesday, November 13, 2012

விலங்குகள் கொண்டாடும் தீபாவளி


ஒருவன் மிருகத்தனமானவன் என்று
தர்க்கம் பேசினாலும்
அவன் மரணத்தை கொண்டாடும்போது
நமக்கும் மிருகத்தனம் ஏறவில்லையா?

உணவுக்காக கொன்றாலும் நன்றி சொல்லியே கொல்வோம்
ஆதிகாலம் முதல் 'Avataar' காலம் வரை
ஆனால் இன்றோ
செத்தவனை கொண்டாட ஊரெல்லாம் உற்சாகம்

குடும்பத்தோடு கொண்டாட ஆண்டுக்கொரு அத்தமம்
வீட்டுச்சூழல் மேம்பட சுற்றுச்சூழல் படுகொலை
செத்தவனும் சாம்பலானான் கொன்றவனும் கடவுளானான்
கண்கட்டி வித்தையாய் காரணம்சொல்லி கபளீகரம்

விளக்கறியா வெட்டில்பூச்சியாய் விலங்குகள் விழிக்க
பட்டாசு ஒலியில் பயந்தோடிய நாய்களும்
மாசுற்ற காற்றால் மயங்கிய மாடுகளும்
பறவைகளும் பிறஉயிர்களும் கடவுளிடம் மன்றாடின

காலம் கனிய கடவுளும் காத்திருக்கிறார் போலும்

அன்று
நாமும் அதே வெட்டில்பூச்சியாய் விழிப்போம்
பூமித்தாய் பூகம்ப bomb வெடிப்பாள்
கடல்தாய் பேரலை புஸ்பானம் விடுவாள்
மின்னல்கள் மத்தாப்பாய் மிளிரும்
வானத்திலிருந்து asteroid ராக்கெட்டுகள் பொழியும்

அப்போது
செத்தாண்டா மனுஷன் என்று
விலங்குகள் கொண்டாடும் தீபாவளி

Friday, November 9, 2012

கிறுக்கல்கள்

1
"கொடுக்கற தெய்வம் கூரைய பிச்சிட்டு கொ.."
முடிப்பதற்குள் மழை கொட்ட
கூடையை தலையில் கவிழ்த்துக்கொண்டு
குடிசையுள் குடைபிடித்தால் பூக்காரி

2
ஆங்கிலம் கலக்காமல் நான்கு வரி எழுதினேன்
அழகான கவிதை என்று retweet செய்தான்
தமிழ் நண்பன்
3
பணம் இருப்பவர்களுக்கு தீபாவளி
பணம் இல்லாதவர்களுக்கு 'Deep'ஆ வலி
  4
கூரை ஏறி கோழி பிடிக்க மறுத்தவன்
கோபுரம் ஏறி கும்பாபிஷேகம் செய்தானாம் 
5
காலம் கனியுமென காத்திருக்காதே
எல்லாக் காய்களும் கனிப்பதில்லை
சில கருகிவிடுகின்றன
சில பிறர் தோட்டத்திற்கு விதைகளாகின்றன
 6
நதிகளை தேசிய மயமாக்காததின் விளைவு
தேசிய நெடுஞ்சாலைகள் நதி போல் காட்சியளிக்கின்றன