தமிழர்கள் பண்டை காலம் கொண்டே வணிகத்தில் சிறந்து விளங்கினர். கடல் கடந்து முத்து, தங்கம், தாணிய வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்று படித்திருப்போம். தமிழர்களின் வணிக நுண்ணறிவிற்கு சிறந்த உதாரணமாக 'மலிவு' என்ற சொல் ஒன்றே போதும்.
தமிழகத்தில் இலவசம் என்ற சொல்லிற்கு அடுத்தபடி 'மலிவு'தான் mass. 'மலிவு விலை உணவகம்', 'மலிவு விலையில் காய்கனி' என்று நாள்தோறும் கேட்கிறோம், படிக்கிறோம். இங்கே மலிவு என்பதற்கு 'விலை குறைந்த' என்ற பொருள் கொண்டு படிக்கிறோம். மலிந்த என்ற வார்த்தையின் மூலத்தை (root) ஆராய்ந்தால் இங்கே ஒரு அறிவியல் கோட்பாடு மறைந்துள்ளதை உணரலாம்.
மலிவு என்ற சொல்லின் மூலம் 'மல்' ஆகும். மல்,மல்கு என்றால் பெருகு, அதிகமாக்கு என்று பொருள். 'நாட்டில் குற்றங்கள் மல்கி (அதிகரித்து) விட்டன', 'இந்தியாவில் ஊழல் மலிந்து (பெருகி) விட்டது', காவிரி மல்கி வழிகிறது போன்ற சொற்றொடர்கள் உதாரணம்.
மலிவின் பொருள் பெருகுதல் என்றிருக்க விலை சம்பந்தமான இடங்களில் மட்டும் விலை குறைந்த, cheap என்ற பொருளில் ஏன் பயன்படுத்தப்படுகிறது?
இங்கே தான் 'demand supply theory'யை தமிழர்கள் நுண்மையாக கையாண்டுள்ளார்கள். பொருளியலில் (economics) 'demand supply theory' படி ஒரு பொருளின் உற்பத்தியும் தரவும் (supply) அதிகமாக இருந்து தேவை (demand) குறைவாக இருந்தால் அதன் விலை குறைவாக இருக்கும். ஆக, மலிவாக (அதிகமாக) ஒரு பொருளின் தரவு இருந்தால் அதன் விலை குறைவாக இருக்கும். இதன் பொருட்டே வணிகம், விலை தொடர்பான சொற்றொடர்களில் 'மலிவு' என்பதன் பொருள் 'cheap' என்ற மருவிய உணர்வோடு பயன்பட்டு வருகிறது. அங்கே உள்ளார்ந்த பொருள், அந்த பொருளின் தரவு பெருகி உள்ளது என்பதே.
ஒரு சிறிய வார்த்தையில் ஒரு வணிக தத்துவமே மறைந்துள்ள நம் தமிழ் மொழி பழமை வாய்ந்தது மட்டும் அல்ல, அறிவியல் பூர்வமானதும் கூட என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவை இல்லை.
No comments:
Post a Comment