Saturday, September 20, 2008

அன்பே சிவம்

நம் அனைவருக்கும் பரிச்சயம் ஆன தலைப்பு. கடவுள் என்றால் என்ன? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? கடவுள், கோவில் , மதம் - இவை எல்லாம் நம் வாழ்வை நெறி படுத்த நாமே கொண்டுவந்த கோட்பாடுகளா? அல்லது, நம்மை படைத்தவர் நாம் வாழ்கையை செம்மையாக நடத்த வழங்கிய கோட்பாடுகளா? இந்த கேள்விகளுக்கு நம்மில் பலர் விடை தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். நான் படித்ததை, கேட்டதை, உணர்ந்ததை என் சிற்றறிவுக்கு எட்டிய அளவிற்கு இங்கு வழங்குகிறேன்.


என்னை பொருத்தவரை கடவுள் ஒரு சுமை தாங்கி. பண்டைய காலத்தில் ( இன்றும் சில கிராமங்களில்) சுமையை தலையில் தூக்கி செல்பவர்களுக்கு ஆங்காங்கே சுமைகர்கள் வைத்திருப்பார்கள். பார்பதற்கு இங்கிலாந்தில் இருக்கும் StoneHenge ஐ போல இருக்கும். சுமை தூக்கிக்கொண்டு செல்பவர்களுக்கு சற்று நேரம் சுமையை இறக்கி வைத்து ஓய்வு எடுக்க இந்த சுமைகர்கள் பயன்படும். இதைபோலதான் கடவுள். வாழ்கை பயணத்தில் நாம் சவால், தோல்வி, அவமானம், வலி போன்ற சுமைகளை மனதில் தாங்கி செல்கின்றோம். இவற்றை தற்காலிகமாக இறக்கி வைத்து மனதை அமைதிபடுத்த பயன்படும் சுமைதாங்கி தான் கடவுள். பயணத்தை தொடர்ந்து நடத்த போவது நாம் தான். சுமையை தூக்கி கொண்டு போவதும் நாம் தான். கடவுள் நாம் தளரும் போது புத்துணர்வு தரும் ஓர் அமைப்பே!

மேலும் ஒரு உதாரணம் - நாம் திரைப்படம் பார்க்க செல்கிறோம். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், நுழைவுச்சீட்டு எவ்வளவு விலை மிகுந்து இருந்தாலும் மூன்று மணி நேர மன மகிழ்ச்சிகாக படம் பார்க்க போகின்றோம். நாம் பார்ப்பது உண்மை அல்ல - வெறும் நாடகமே என்று தெரிந்தும் மன நிம்மதிக்காக, ஓர் ஓய்வுக்காக படம் பார்க்கின்றோம். கதாநாயகனை கள்வர்கள் அடித்தால் கோவம் கொள்கின்றோம். கதாநாயகி 'I love you' சொன்னால் நம்மை பார்த்து சொன்னது போல் ஒரு மகிழ்ச்சி. ஏன்? இது ஓர் மாயை என்று தெரியாதா? தெரிந்தும் ஏன் விரும்புகிறோம்? காரணம் - ஒரு மன ஓய்வு. மறுமலர்ச்சி. வாழ்கை சுமையை சற்று நேரம் இறக்கி வைக்கும் ஒரு கோலாக பார்க்கிறோம். அதேபோலதான் கடவுளும். கோவிலுக்கு சென்று கடவுள் வழிபடும் போது ஓர் மன அமைதி கிடைக்கிறது. மனம் அமைதி ஆனால் எண்ணத்தில் தெளிவு வரும். எண்ணம் தெளிவடைந்தால் நாம் செயல்களை சிறப்பாக செய்யலாம். ஆகா, கடவுள் நாம் மன நிம்மதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பே!


அப்படி என்றால் கடவுள் நம் மனதில் இருக்கும் ஒரு கற்பனையா? அல்லது நம்மை வழி நடத்தும் சக்தியா என்ற கேள்வி எழும். எனக்கும் எழுந்தது. இதற்கு விடை காண ஒரு துணுக்காக அமைந்தது நம் தமிழ் மொழி. 'God' என்ற ஆங்கில
சொல்லுக்கு தமிழில் குறைந்தது மூன்று வடிவங்கள் உண்டு - ஆண்டவன், இறைவன், கடவுள். இந்த ஒவ்வொன்றையும் வரிசை படுத்தி ஆராய்வோம்.

ஆண்டவன் - இந்த சொல்லுக்கு பொருள் - 'ஆள்பவன்' - நம்மை ஆள்பவர் என்று பொருள் கொள்ளலாம். நம்மை ஆள்பவர் என்றால் அரசன் என்றும் கொள்ளலாம். "God" என்றும் கொள்ளலாம். ஆகா, தமிழர்கள் அரசனையும் கடவுளுக்கு இணையாக ஒப்பிட்டே போற்றி இருக்க வேண்டும். இதற்கு மற்றுமோர் உவமை - 'கோவில்' என்ற சொல். இதை பிரித்து படித்தால் 'கோ + இல் = கோவில்'. 'கோ' என்றால் அரசன். 'இல்' என்றால் இல்லம். அரசன் தங்கும் இடத்தையும் கடவுள் தங்கும் இடத்தையும் நாம் ஒருவாரே அழைத்து வந்திருக்கிறோம். இன்னும் சொல்லபோனால் அரசர்கள் போர்காலங்களில் கோவில்களிலே தங்கினார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகளும் உண்டு. இதற்கு எடுத்துக்காட்டு கோட்டைகள் போல் கட்டபட்டிருக்கும் சில தமிழ்நாட்டு கோவில்கள்.


இப்பொழுது, 'இறைவன்' என்ற சொல்லைஆராய்வோம். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி. அப்படி வாழ்ந்த ஆதி தமிழர் பயன்படுத்திய சொல் என்று 'இறைவன்' ஐ கொள்ளலாம். காரணம் - அக்கால மக்களின் நோக்கமாக உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு இருந்தது. தினமும் உணவை வேட்டை மற்றும் விவசாயம் மூலமாக மக்களின் அன்றாட நடவடிக்கையாக இருந்தது. அவர்கள் தங்கள் தேவைக்காக 'God' ஐ அழைத்த விதம் இறைவன். இறைவன் என்றால் இறையை வழங்குபவர். இறை என்றால் உணவு. ஆக இங்கும் 'God' என்பவர் தேவைக்கு ஏற்ப அழைக்கப்பட்ட ஓர் உணர்வே.

இந்த கருத்தை மேலும் அழுத்தமாக சிதார்ந்த நெறியில் எடுத்து கூற நாம் 'கடவுள்' என்ற சொல்லை எடுத்து கொள்வோம். 'கடவுள்' என்ற சொல்லை பிரித்தால் 'கட + உள் ' என்று வரும். 'கட' என்பது கடப்பது. 'உள்' என்றால் உள்ளம். அதாவது நம் உள்ளத்தை நாம் கடப்பதே கடவுள். உள்ளத்தை கடப்பது என்றால் என்ன? உள்ளதை கடந்தால் எப்படி கடவுளை உணரலாம்? இதை சற்று விளக்கமாக பார்போம்.

நம் உள்ளத்தை கடப்பது என்றால் நாம் யார் என்று உணர்வது. 'Who am I ?' என்று இதை ஆங்கிலத்தில் பிரபலமாக கூறுவார். ஒவ்வொருவர் வாழ்கைக்கும் ஓர் காரணம் இருக்கிறது. இறந்து போனவர்களின் புகைபடங்களை பார்த்தால் அவர் பிறந்த வருடம் எழுதபட்டிருக்கும். அடுத்தது அவர் இறந்த வருடம் எழுதபட்டிருக்கும். இடையே ஒரு சிறிய கோடு இருக்கும். அதுதான் அவர் வாழ்கை காலம். நம் வாழ்கை கோடு எவ்வளவு நீளம் என்பது நம் கையில் இருக்கிறது. இந்த பூமியில் வாழும் பல்லாயிர கோடி மக்கள் ஒவ்வொருவரின் பிறப்பிலும் ஓர் காரணம் இருக்கிறது. அந்த உண்மையை உணர நாம் மேற்கொள்ளும் பயணமே வாழ்கை. நாம் சந்திக்கும் சவால்கள், தோல்விகள், அவமானங்கள், வலிகள் அனைத்தும் நம்மை நாமே உணர உதவும் சந்தர்பங்கள். நாம் நம் வாழ் பயனை உணரும் போது ஞானம் பிறக்கிறது. உலகம் இயங்குவதன் காரணம் புரிகிறது. சுகம், சோகம், மகிழ்ச்சி, வலி, வெற்றி, தோல்வி - அனைத்தையும் சமமாக பார்போம். அனைவரையும் சமமாக கருதுவோம். யார் மீதும் வெறுப்பு இன்றி அனைவரையும் விரும்புவோம். அனைவரிடமும் அன்பு காட்டுவோம். அப்பொழுது மனித நிலையை விட உயர்ந்த நிலைக்கு செல்கிறோம். அன்பால் சிவம் அடைகிறோம். அன்பே சிவம் ஆகிறோம். பிறகு....


"யாதும் கோவிலே!!! யாவரும் கடவுளே!!!"

~ அருண்