வீட்டுத் தின்னையில் விளையாடிய குருவி
வீடே இல்லாமல் திரியுது எங்கோ!
ஊர் சுற்றி உறவாடிய குருவி
ஊன் இன்றி கருகுது எங்கோ!
கூரைகளில் கூடுகட்டி குடிபுகுந்த குருவி
கூரையின்றி தவிக்குது எங்கோ!
ஆறறிவு கொண்ட அரக்கர்கள் நாம்
அமைதி கொள்வது என்றோ?
குருவி - காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு மிகவும் அறிமுகமான பறவை.
இந்த வாக்கியத்தை உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் 1990க்கு முன்னால் பிறந்திருந்தாலே ஒழிய இதை நம்ப வாய்ப்பில்லை. மனிதனின் பொருளாதார வளர்ச்சியில் பலியான, பலி ஆகிக்கொண்டிருக்கும் இயற்கை வளங்களுள்
குருவிகளும் அடங்கும். கான்கிரீட் வீடுகள், இயற்கை நிழலில்லா குடியிருப்புகள், மரம் இல்லா சாலைகள், குறைந்து கொண்டே வரும் நீர் தேக்கங்கள் - இவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது
பறவைகள் - குறிப்பாக குருவிகள். மேலும் ஒரு முக்கிய காரணம் கைபேசி கோபுரங்கள் (cellphone towers). 10 - 14 நாட்களில் பொறிக்கும் குருவி முட்டைகள் கைபேசி அலைவீச்சால் 30 நாட்கள் ஆகியும் பொறிப்பதில்லையாம். இதுவே குருவி இனம் குறைய முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஓட்டு வீடுகளில் கூடு கட்டி, குஞ்சுகள் பொறித்து, முற்றத்தில் நெல் தின்று, இனிமையாக கூவி வந்த குருவிகளை சிறுவயதில் பார்த்து ரசித்தது இன்னும் நினைவில் நிற்கிறது. கூட்டாக பறந்து உணவு தேடி தின்னும் இப்பறவைகள் வண்டு, புச்சி, புழு போன்றவற்றை உண்டு நமக்கும் உதவுகின்றன. இவற்றின் கூவல்களை ரசிக்காதவர்களே இருக்க இயலாது. குறிப்பாக அந்தியின் மயக்கத்தோடு இவற்றின் கூவல்களின் பின்னணியில் மாலை பொழுதுகளை கழிப்பது தனி சுகம். சிலப்பதிகாரம், புறநானூறு, நற்றினை மற்றும் பல தமிழ் இலக்கியங்களிலும் பரவலாக குருவிகள் பற்றிய குறிப்புகள் உண்டு. தமிழ் வரலாற்றில் கூட, பாரி வள்ளல் குடும்பம் போரில் முற்றுகையால் அவதியுற்ற போது, குருவிகள் நெற்கதிர்களை கொண்டு வந்து உணவளித்ததாக சங்க பாடல்கள் கூறுகின்றன.
இன்று உலக வீட்டுகுருவிகள் நாள். ஊர் சுற்றித் திரிந்த குருவியை நினைவில் மட்டும் பறக்க விடலாமா?
குருவிகளால் எனக்கு என்ன பயன், காலப்போக்கின் மாற்றங்களால் ஓரம்கட்டப்படும் 'unfit species' குருவிகள், இவற்றை பாதுகாத்து என்ன பயன் போன்ற உலகமயமாக்களால் குறுகிப்போன சிந்தனையுடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், தன் வளர்சிக்காக இயற்கையையே அடகு வைத்திருக்கும் நாம், பிராயச்சித்தமாக செய்யக்கூடிய சேவைகளுள் ஒன்று குருவிகள் மற்றும் மற்ற பறவைகளை ஆதரிப்பது. தங்கள் வீட்டின் வெளியில் சின்ன கிண்ணங்களில் நீர் நிரப்பி வைக்கலாம். வீட்டு மாடி, வாசலில், நெல் தானியங்களை தூவி வைக்கலாம். போதிய வசதி இருந்தால் சின்ன அட்டை பெட்டிகளில் ஓட்டை போட்டு கூடுகளாக மாற்றி பொருத்தமான இடத்தில் பொருத்தி குருவிகளை வரவைத்து அழகு பார்க்கலாம்.
இன்று மாலை காற்றின் மௌனத்தை நன்கு கேளுங்கள் - குருவிகளின் கூக்குரல் கேட்கிறதா?
No comments:
Post a Comment